Saturday, September 4, 2010

விடியலை நோக்கி...

விடியலை நோக்கி பயணிக்கிறது வாழ்க்கை
இடையில் இருட்டில் இடமறியா பொழுதில்
இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி
இடையூறு செய்கையில் - கிடைத்த
இடைவெளியில் கிடு கிடுவென
விரைகிறது வாழ்க்கை பயணம்!

நெடுதூர நடைபாதை நடப்பதறியா பயணம்
நினைவுகள் நிஜமாகுமா என்ற ஏக்கத்தை
நடுக்கடலில் நிறுத்துகிறது நங்கூரங்கள்
நீங்காத நினைவலைகள் கரைகிறது
நிலவின் பிறைகளாய்
நடு நடுவில் நகர்த்துகிறது
நம்பிக்கை வார்த்தைகள்!

எங்கு செல்கிறோம் என்ன செய்கிறோமென்று
எண்ணுவதற்குள் எத்தனை பிரச்சினைகள்
எத்தனை சிக்கல்கள் அத்தனையும் தாண்டி
எண்ணியதை அடைய
எண்ணம் போல் வாழ
எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்
எடுக்கும் முயற்சிகள் அத்தனையும்
ஏக்கத்தை நிறைவாக்கும் ஏணிப்படிகள்!

காலங்கள் சுழல, நாட்களும் நகர்கிறது
கால்களும் நடை பதிக்கிறது
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றாய் பறந்து போன நாட்களை
காவியங்கள் தான் கதையாய் சொல்லுமோ?
காற்றாடியை கயிறுகளால் கட்டி
கண்ணாடிக்குள் வைத்து அழகுதான் பார்க்க முடியுமா?
கவிதையாய் நாட்கள் கழிய நானும் காத்திருக்கிறேன்
காலத்தின் கைகளில்!

சந்தோஷமும் சலிப்பும் சரிசமமாய்
சுற்றம் வாழ்த்த சராசரியாய்
சொந்தம் போற்ற செயற்கையாய்
சுயத்திற்காய் சமாளிப்புக்கள் எத்தனை எத்தனை
சீராய் செல்லும் ஒருவழி பாதையில்
சிந்தனைக்கெட்டாத சுதந்திரம் கிடைத்தாற்போல்
சீக்கிரமாய் நடைகள் இடையில்
சிறு சிறு இடறல்கள், சிந்தித்துப்பார்த்தால்
சில்லரைகளை செலவழித்துப் பெற்ற
சலவை நோட்டு தான் வாழ்க்கை!

உழவர் காத்த பூமியை ஊடகங்கள் காக்கிறது
உண்மையை அறிந்தும் உமிழ் விழுங்கி
ஊமையனாகி போனது அவலம்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்
உனக்கெதற்கு ஊர்வம்பு என்று
உள்ளத்தில் உள்ளதை உரைக்க முடியாமல்
உணர்ச்சிகளை உண்டியலில் சேமிக்கிறேன்
உடைந்த சில்லுகளாய்
உள்ளக்குமுறல்கள் உப்பாய் கரைகிறது ஊருக்காக
உயிர்வளர்த்த உறவுகளுக்காக என் உழைப்பும்
உருளும் உலகில் உழல்கிறது என் பயணமும்!

பண்பும் பாசமும் இங்கு பாதி விலையில்
பண்பாடு எங்கோ பாடத்தில் படித்த ஞாபகம்
பண்பை பறைசாற்றிய பாரதத்தை
பங்கு போட பங்காளிகள் தயார்
பாரதமாதாவை படுக்க வைத்து படையலிட்டு
பாட்டுப்பாடி பாடையில் ஏத்துகிறார்கள்..
பதறுகளே, நம் பாரதத்தின் பெருமையை
புரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லையடா என்று
புலம்ப தான் முடிகிறது என்னால்
பதறுகிறேன் பறைசாற்ற முடியாத
பரிதாப நிலையில் நானும் பயணிக்கிறேன்
பிறந்த மண்ணில் பரதேசியாய்!

வானளவிற்கு உயர வேண்டும் என்று
வாய் கிழிய பேசி பேசி
வீணடித்த நிமிடங்கள் எத்தனை எத்தனை
விரயமாக்கிய பணங்கள் எத்தனை எத்தனை
விடுதலை பெற விரும்பும் மனமும்
விடுவிக்க மனமில்லாத சமுதாயமும்
வியர்வையின் பரிசாய் வீடு வாசலும்
விண்ணப்பிக்காமல் எனக்கு கிடைத்த குடும்பமும்
விலைமதியா சொத்தாகிய என் குழந்தைகளையும்
விட்டு விட்டு விடைபெற்று செல்லும் போது
விண்ணும் மண்ணும் கேட்கும் டேய் மனிதா!
விருந்தாளியாய் வந்த நீ எதை
விதைத்து விட்டுச் சென்றாய் என...

மனிதா!
மண்ணுக்குள் மறையும் முன்
மனிதத்தையாவது விட்டு விட்டுச் செல்!

2 comments: